பாடல் பிறந்த கதை
அன்று அதிகாலை நேரத்தில் எழுந்து விட்டாள் ஆவுடை. காலைக்கடன்களை முடித்து கொல்லையில் கிணற்றடியில் அமர்ந்திருந்தாள்.
பக்கத்து அகத்தில் சிறிது சலசலப்பு கேட்டது. சாதாரணமாக ஆவுடை மற்றவர் விஷயங்களில் தலையிடுவது இல்லை. ஆனால் இன்று சற்று சத்தம் அதிகமாக கேட்டது. அந்த அகத்து கணவன் தன் மனைவியை அதிகாரம் செய்து கொண்டிருந்தான்.
ஆவுடையின் மனம் யோசனையில் ஆழ்ந்தது.
“ஏன் இப்படி தனது ஆன்ம விடுதலைக்கு முயலாமல் மக்கள் வீடுகளில் ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு சண்டையிட்டுக் கொள்கிறார்கள்?”
“ஒருவராகிலும் பரமார்த்த சிந்தனையில் ஈடுபடவில்லையே”
இந்த சிந்தனையில் இருந்த ஆவுடை ஶ்ரீ குருவருளால் இந்த எண்ணத்தை ஒரு பாடலின் அடியாக முணுமுணுத்தாள்.
அப்படி பரமார்த்தங்களை பாராதவன் பாபிதான்.
அவள் முனுமுணுத்த வரி அடி இப்படி அமைந்தது :
“ஒரு பாபியாகிலும் பரமார்த்தங்களை பாரானோ முக்தி சேரானோ?”
இதையே திரும்பத் திரும்ப பாடிய ஆவுடை உள்ளே சென்று ஒரு காகிதத்தில் இதை எழுதினாள். அம்மாவை அழைத்தாள்.
“அம்மா ! இங்கே வாருங்கோ!”
“என்னம்மா ஆவுடை?”
“இதைப் பாடிப் பாருங்கள்!”
அந்த காகிதத்தை அவளிடம் கொடுத்தாள்.
அதைப் படித்த அன்னை
“யாரும்மா இவன்? ஏன் இப்படி இருக்கிறான்?”
என்று வெகுளியாக கேட்டாள்.
“ஒரு குறிப்பிட்ட நபர் இல்லையம்மா, பொதுவாக எழுதினேன். மனிதர்கள் தன்னைப் பற்றி நினைக்காமல் பிறரைப் பற்றியே நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். இதைத்தான்
ஒரு பாபியாகிலும் பரமார்த்தங்களை பாரானோ முக்தி சேரானோ?
என்று எழுதினேன் அம்மா! மோகன ராகத்தில் பாடிப் பார்த்தேன். அழகாக வருகிறது. முழுவதும் அனுபல்லவி சரணம் என்று எழுதி விடுகிறேன். நன்றாக இருக்கிறதா அம்மா?” என்று கேட்டாள் ஆவுடை.
“ஆமாம் அம்மா மிகவும் நன்றாக இருக்கு, உனக்கு இது சந்தோஷம் தரும்னா இப்படி நிறைய எழுது ஆவுடை ”
ஊக்கமுடன் உரைத்தாள் அன்னை.
அவள் அன்று தந்த ஊக்கம் என்றைக்கும் முக்திக்கு முயலும் ஆன்மாக்களுக்கு உதவிகரமாக அமைந்தது.
அந்த பாடல் இதோ :-
பல்லவி
“ஒரு பாபியாகிலும் பரமார்த்தங்களைப் பாரானோ, முக்தி சேரானோ
அனுபல்லவி
தேவநரதிர்யகாதிகளுக்குளிந்த தேகத்தில் வேறாகி ஜனித்தவர்களுக்குள்ளே
(ஒரு)
சரணம்
பக்தி வைராக்கிய பாதையிலே என்ன பாராக்காரருண்டோ முக்திமார்க்கத்தில் நடக்கிறபேர்களுக்கு முள்ளுகள் போட்டதுண்டோ
சித்து ஜடங்களை சிந்திக்கும் பேர்களுக்கு சிரசிலே கொம்புமுண்டோ தத்வஞானத்தால் தன்னையறிந்தபின் தானவனாக தடையுமுண்டோ பக்தி என்னும் பரிபாகத்தினால், ஜீவன்முக்திவேணும் என்ற தாகத்தினால், யுக்திகளா மொரு வேகத்தினால் நித்தியாநித்திய விவேகத்தினால்
(ஒரு) 1
அல்பமாகு முடலழிந்துபோகு முன்னே யறிந்தா லாகாதோ ஸ்வப்ளஜாக்கிரம் சுஷுப்தி மூன்றையும் சோதித்தாலாகாதோ கல்பனையாமிந்த காரியகாரணத்தை கண்டித்தா லாகாதோ
அத்புதமாம் தன்னையாரென்று பார்த்தா லழியாப்பதமங்கே யாகாதோ’ கல்பனை செய்கிற மோகத்திலே வந்து உத்பன்னமாகும் தேகத்திலே பிற்பன்னமாம்விவேகத்திலே யிது கல்பனையாமிந்த லோகத்திலே
(ஒரு) 2
வேதம்புகழும் வெங்கடேசுவர நாதரை வேண்டாத குறைதானோ பாதகராயிந்த பாரில் பிறப்பதும் பிரதிபந்தவகைதானோ மாதவராமிந்த மகத்துக்கள் சாபமோ மாயையின் குணம்தானோ, ஏதுவகையோ யிது நானறியேனிந்த ஏழைகள் பாக்கிய மிதுதானோ பேதமில்லா பரிபூரணமாய் பிந்து நாதங்களுக்கொரு காரணமாய்”
ஆவுடைக்கு சிவ பூஜை என்றால் மிகுந்த ஈடுபாடு. அகத்தில் பரம்பரையாக இருந்த சிவலிங்கத்திற்கு அபிஷகம் ஆராதனைகள் செய்து வந்தாள். தனது குருவும் சிவன் நாமத்தையே ஜபித்ததால் அவளுக்கு மேலும் ஈடுபாடு வந்தது.
அவள் மலர் கொய்வதையும், சிவ சின்னங்கள் தரித்ததையும் பொறாத ஜனங்கள் அவளை தாழ்த்தி பேசத் தொடங்கினர்.
“இப்பபடிப் பட்டவாள ஜாதி பிரஷ்டம் தான் பண்ணணும்”.
சொல்வதுடன் இல்லாமல் அதனை செயல் படுத்தவும் முயன்றனர்.
இதை மேலும் பொறுக்க முடியாமல் ஆவுடை ஒரு முடிவுக்கு வந்தாள்.
இந்த உலகம் பரந்து விரிந்து உள்ளது. கிணற்றுத்தவளையாக இந்த ஏச்சிலும் பேச்சிலும் ஏன் காலம் கழிக்க வேண்டும்? இப்படியே கொஞ்ச காலம் தீர்த்த யாத்திரையாக செல்லுவோமே என்று எண்ணினாள். அம்மாவிடம் இதைத் தெரிவித்தபோது முதலில் தயங்கினாள்.
“தனியா எப்படி ஆவுடை செல்வாய்? சரியான உணவு, தங்குமிடம் கிடைக்காதே?”
அதற்கு ஆவுடை
“குருவருள் துணை இருக்கும்மா, அவர் வழி நடத்துவார்”
என்று ஒருவாறு அம்மாவை சமாதானப் படுத்தி தனியே கிளம்பி விட்டாள்.
“எத்தனை நாள்களுக்கு போவாள், இங்கே திரும்பி வந்துதானே ஆகனும்
ஊர் எப்பொதும் போல் பரிகசித்தது.
அவளும் எப்பொதும் போல் அதனை உதாசீனப் படுத்தி கிளம்பி விட்டாள்.
இனி இந்த புதுமைப் பெண்னின் இந்த புனிதப் பயணத்தைத் தொடர்ந்து காண்போம்.
32 total views, 3 views today
குருவே சரணம்
Super Appa Kavidai
நன்றி அண்ணா.
While reading Each and every episode getting excitement for upcoming episode. Super sundar
அடுத்து வரும் அத்தியாயங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.